Friday, December 5, 2014

சர்ச்சைக்குரிய ஒரு சாமியாரின் உண்மைக்கதை

சட்டத்திற்கு சவால் விட்ட சர்ச்சைக்குரிய சாமியாரை நீண்ட போராட்டங்களுக்கு பிறகு கைது செய்திருக்கிறது ஹரியானா மாநில காவல்துறை. அவரை கைது செய்ததில் மாநில பா.ஜ.க. அரசு நிம்மதி பெருமூச்சு விட்டாலும் அவரது சீடர்கள் நடத்தி வரும் கிளர்ச்சிகளால் பஞ்சாப்-ஹரியானாவில் பதட்டம் அதிகரித்தப்படியே இருக்கிறது.

ஹரியானாவில் புகழ் பெற்ற சாமியார்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் ஜெகத்குரு(?) ராம்பால்ஜி மஹராஜ். ஹரியானாவின் ரோக்டாக் மாவட்டத்தில் சுமார் 24 ஏக்கர் பரப்பளவில் சத்லோக் ஆசிரமம் நடத்தி வருகிறார் ராம்பால். மன்னர் காலத்து கோட்டை போல அவரது ஆசிரமம் பிர மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அரசு களின் செல்வாக்கும் அரசியல்வாதி களின் செல்வாக்கும் ஒருங்கே பெற்ற ராம்பால்ஜியை கைது செய்திருப்பது வட மாநிலங்களில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த மாநில அரசு எடுத்த நடவடிக்கையால் காவல்துறைக்கும் சாமியாரின்rampal1 சீடர்களுக்குமிடையே நடந்த மோதல், துப்பாக்கிச்சூடு, பெட்ரோல் குண்டு வீச்சு, ஆசிட் வீச்சு என நடந்த வன்முறையில் 6 பேர் பலியாகியிருக்கிறார்கள். நான்குநாள் நடந்த இந்த களேபரங்களால் ஒட்டுமொத்த ஹரியானாவும் ஸ்தம்பித்துப் போய்விட்டது.

ஹரியானா அரசின் போக்குவரத்து துறையில் சிறப்பு அதிகாரியாக பணிபுரியும் தமிழரான கஜேந்திரனிடம் ராம்பால் பற்றி விசாரித்தபோது, “”சோனிபட் மாவட்டத்திலுள்ள தனானா கிராமத்தில் 1951-ல் பிறந்தவர். அடிப்படையில் அவர் ஒரு டிப்ளமோ இன்ஜினியர். ஹரியானா அரசின் நீர்பாசனத் துறையில் இளநிலைப் பொறியாளராக பதவியில் இருந்தவர்.

1999-ல், “கபீர்தாசரின் 11-வது வழித்தோன்றல் நான் என பிரகடனப்படுத்தி, சத்லோக் ஆசிரமத்தை தொடங்கினார். இதனைத் தொடர்ந்தே, அவரது ராஜினாமாவை 2000-ல் ஏற்று அவரை வெளியே துரத்தியது ஹரியானா அரசு. அவரின் தத்துவ பிரசங்கத்திற்கு வட மாநிலங்களில் ஆதரவு பெருக, கோடிக்கணக்கில் நிதிகள் குவிந்தன. மாநில முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமத்தை தொடங்கினார். தனது பெயரையும் ஜெகத்குரு ராம்பால்ஜி மஹராஜ் என மாற்றிக்கொண்டார்.

ஆசிரம் அமைந்த ரோக்டாக் மாவட்டமே இவரது கட்டுப்பாட்டுக்குள் சென்றது. அதாவது, இந்த மாவட்டத்தில் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் ஆக வேண்டுமாயின் ராம்பாலின் ஆசி இருந்தால் மட்டுமே ஆக முடியும். அந்தளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார். ஆனால், ஆரிய சமாஜத்தின் ஆகப்பெரியவரான சுவாமி தயானந்த சரஸ்வதியைப் பற்றி இவர் மோசமாக விமர்சனம் செய்யத்துவங்க, ஆரிய சமாஜத்திற்கும் இவருக்கும் முரண்பாடுகள் வெடித்தன. அதிலிருந்தே சர்ச்சைக்குரிய சாமியாராகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்” என்று ராம்பாலின் பின்னணி களைச் சுட்டிக்காட்டினார்.

2006-ல் இரு தரப்புக்கும் நடந்த வெட்டு-குத்து மோதலில் ஆரிய சமாஜத்தை சேர்ந்த ஒருவர் கொல்லப்படுகிறார். இதில் ராம்பால் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்கிறது போலீஸ். இரண்டு வருடம் சிறையில் இருந்த சாமியார், 2008 மே 14-ல் ஜாமீனில் வெளியே வருகிறார். ஆனால், அன்று முதல் இன்று வரை கோர்ட்டில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்துக்கொண்டே இருந்தார். இதுவரை 43 தடவை வாய்தா வாங்கியிருக்கிறார். நீதிபதிகள் ஜெயபால், லிசாகில் பெஞ்ச், “நவம்பர் 5-ல் ராம்பால் ஆஜராக வேண்டும்’ என நோட்டீஸ் அனுப்பியது.rampal2

ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதிகள் ஜாமீனில் வெளியே வரமுடியாத வாரண்ட்டை பிறப்பித்ததுடன், ராம்பாலை கைது செய்து நவம்பர் 10-ந்தேதி ஆஜர்படுத்துமாறு உள்துறை செயலாள ருக்கும் டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்டனர். அதனையடுத்து ராம்பாலை கைது செய்ய காவல்துறையினரும் சிறப்பு அதிரடி படையினரும் ஆசிரமத்துக்கு போவார்கள். ஆசிரமத்தின் கதவே திறக்கப்படாது. வெளியே நிற்கும் சீடர்களுக்கும் போலீஸுக்கும் தகராறு நடக்கும். திரும்பி வந்துவிடுவார்கள். ஆளும் பா.ஜ.க. அரசும் சாமியார் மீது கை வைக்க ரொம்பவே தயங்கியது. பயந்தது. rampal3

10-ந் தேதி விசாரணை வந்தபோது, எங்கே ராம்பால்? கைது செய்துவிட்டீர்களா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்ப, “இன்னும் கைது செய்ய முடியவில்லை. மேலும் டைம் வேணும்’ என்று அட்வகேட் ஜெனரல் பி.ஆர்.மகாஜன் சொன்னதுடன் சாமியாருக்கு உடல்நிலை சரியில்லை என்று மெடிக்கல் போர்டு தந்த ஒரு ரிப்போர்ட்டையும் தாக்கல் செய்கிறார். அதைப் பார்த்து கோபமடைந்த நீதிபதிகள், சட்டத்தை மதிக்காத ஒரு நபரை உங்களால் கைது செய்ய முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்? என்று கண்டித்ததுடன், “ராம்பாலை கைது செய்து 17-ல் ஆஜர்படுத்த வேண்டும். இல்லையேல் ஹோம் செக்ரட்டரியும் டி.ஜி.பி.யும் கோர்ட்டுக்கு வரவேண்டியதிருக்கும்’ என எச்சரித்தனர்.

இதனையறிந்த சாமியார், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம் என பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அப்பாவி ஏழை மக்களை குழந்தை குட்டிகளுடன் rampal4சுமார் 15 ஆயிரம் பேரை திரட்டி வந்து தனது ஆசிரமத்தில் வைத்துக்கொண் டார். கோர்ட் உத்தரவு படி 17-ந்தேதியும் கைது செய்யமுடியாததால் அரசையும் காவல் துறையையும் கடுமையாக விமர்சித்ததுடன், கைது பண்ணலைன்னா 2008-ல் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வோம் என எச்சரித்தனர் நீதிபதிகள். இதனால், ஹரியானா அரசுக்கு நெருக்கடி ஏற்பட, மத்திய உள்துறைக்கு அவசரமாக ஒரு கடிதத்தை அனுப்புகிறது மாநில உள்துறை. அதில், “ராம்பாலை கைது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆசிரமத்துக்குள் அவரது சீடர்கள் ஆயுதங்களையும் வெடிப் பொருட்களையும் பதுக்கி வைத்திருப்பதாக நாங்கள் அச்சப்படுகிறோம். அதனால், ஆசிரமத்தினுள் என்ன இருக்கிறது என் பதையும் ராம்பால் எங்கே பதுங்கியிருக்கிறார் என்பதையும் கண்டறிய ஆளில்லா வேவு விமானங்களை கொடுங்கள்’ என்று கேட்டுக்கொள்ள, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இதனை மறுத்ததுடன் “சட்டத் தின் ஆட்சியை நிலைநிறுத்த கடுமையான ஆக்ஷன் எடுங்கள்” என முதல்வர் கட்டாருக்கு அறிவுறுத்தினார்.

“”இதனால் நிலைமைகள் சீரியசாக, போலீஸ் படை, சிறப்பு காவல் படை, கமாண்டோ படை என மூன்று தரப்பினரும் புல்லட் புரூஃப் ஆடைகளை அணிந்தபடி ஆசிரமத்தின் முன்பு குவிய, அதற்கேற்ப சீடர்களும் குவிந்தனர். பதட்டம் அதிகரிக்க துவங்கியது. மதில் மீது ஏறி நின்று போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் சீடர்கள். பதிலுக்கு போலீசும் துப்பாக்கி சூடு நடத்த சீடர்களோ பெட்ரோல் குண்டுகளையும் ஆசிட் பாட்டில்களையும் வீசி அடித்தனர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தார்கள். துப்பாக்கி சூட்டில் முதலில் இரண்டு அப்பாவிகள் உயிரிழக்க, ஜே.சி.பி. இயந்திரங்களை வரவழைத்து 20 அடி உயரமுள்ள சுற்று சுவரை இடித்து தள்ள உத்தரவிட்டார் டி.ஜி.பி. வசிஸ்த். 4 ஜே.சி.பி.க் கள் சுவரை இடித்து தள்ளி உள்ளே சென்றது. அந்த ஜே.சி.பி.க்களை தீயிட்டு கொளுத்தினார்கள். டிரைவர்களோ தப்பித்து ஓடி வந்தனர்.

பெண்களையும் குழந்தைகளையும் முன்னிறுத்தி சீடர்கள் மோதல்களில் ஈடுபட, “உள்ளே 200 கேஸ் சிலிண்டர்களும் 1000 லிட்டருக்கும் அதிகமான பெட்ரோலும் வைத்திருக்கிறார்கள். அதையே அவர்கள் ஆயுதங்களாக பயன்படுத்தக்கூடும். துப் பாக்கி சூடு நடத்தாதீர்கள்’ என்று உத்தர விட்ட டி.ஜி.பி., “உங்களை பலிகடாவாக்க நினைக்கிறார் சாமியார். முப்பது நிமிடம் டைம் தரேன். ஒதுங்கிக்கொள்ளுங்கள்’ என மக்களை எச்சரிக்கை செய்ய, அப்பாவிகள் மெல்ல, மெல்ல விலக ஆரம்பித்தனர். அப்போது, உள்ளே நுழைந்த போலீஸ், மூன்று பிரிவாக பிரிந்து ஒரு பிரிவு மக்களை மீட்டது, மற்றொரு பிரிவு சீடர்களோடு மோதி அவர்களை தடுத்தது, அடுத்த பிரிவு ராம்பாலை கைது செய்ய ஆசிரமத்தில் தேடுதல் வேட்டையை நடத்தியது. 18 மணி நேரம் நடந்த இந்தத் தொடர் ஆபரேசனில், சொகுசு அறையில் பதுங்கியிருந்த சாமியாரை 19-ந்தேதி நள்ளிரவில் கைது செய்தோம்” என்று விவரித்தனர் ஹரியானா போலீஸார்.

கைது செய்யப்பட்ட சாமியார்மீது தேசத் துரோகம், கொலை, மத துவேசம் உள்ளிட்ட வழக்குகள் பாய்ந்துள்ளன. சட்டத்திற்கு சவால் விட்டுக்கொண்டிருந்த சாமியாரை கைது செய்து நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறது ஹரியானா பா.ஜ.க. அரசு.

0 comments:

Post a Comment

Blog Archive