Sunday, December 7, 2014

ஜெ., தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி குன்ஹா பந்தாடப்பட்டார்..!

 ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மைக்கேல் டி குன்ஹா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் 4 வருடம் ஜெயில் தண்டனையும், ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாய் அபராதமும், மற்ற மூவருக்கும் 20 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி ஜெயலலிதாவிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் 6 வாரங்களுக்குள் அதாவது டிசம்பர் 18-ந் தேதிக்குள் கர்நாடக ஐகோர்ட்டுக்கு மனுதாரர்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தவிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கர்நாடக ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு நீதிமன்றப் பதிவாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.


பெங்களூர் சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி சோமையா ராஜூக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினியைத் தாக்கும் பாரதிராஜா

 நடிகனிடம் ஆஸ்கார் விருது எப்போது வாங்குவீர்கள் என்று ஊடகங்கள் கேட்பதை விட்டுவிட்டு, அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று ஏன் கேட்கிறீர்கள்... அரசியலில் ஈடுபட நடிகனுக்கு என்ன தகுதி இருக்கிறது.. ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிட்டுகிட்டே இருப்பீங்க.. என்பது போல தடாலடியாக பேட்டியளித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

ஒரு வார இதழுக்கு தந்துள்ள பேட்டியின்போது,

விஜயகாந்த், ரஜினி, விஜய் என நடிகர்கள் அரசியலுக்கு வர்றதுக்கு சினிமாதான் பாதையா? என்ற கேள்விக்கு பாரதிராஜா பதிலளித்துள்ளதாவது:

இதுக்கு அடிப்படையான காரணம் யார் சொல்லுங்க? ஊடகம்தான். நடிகர்களைத் தூண்டிவிட்டு, 'அரசியலுக்கு வருவீங்களா?'னு முதல் கேள்வி கேட்குது. சினிமாவில் சிறந்த படைப்புகளைக் கொடுத்திருக்கீங்க. மேடையில உணர்ச்சிகரமாப் பேசுறீங்க. நீங்க ஏன் அரசியலுக்கு வரக் கூடாது'னு என்கிட்டயே கேக்கிறாங்க.

ஒய் தே ஆர் டூயிங் லைக் திஸ்? ஒரு நடிகன்கிட்ட, 'எப்போ ஆஸ்கர் விருது ஜெயிப்பீங்க?'னு கேளுங்க. அதை விட்டுட்டு அரசியல் பத்தி எல்லாம் ஏன் கருத்து கேக்கிறீங்க? சரி... அப்படியே யாராவது கேட்டாலும், அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்.

அரசியலில் ஈடுபட எனக்கு என்ன தகுதி இருக்கு? சமூகத்தில் என் பொறுப்பு, ஒரு கதை சொல்லி! அதுக்கு மேல எனக்கு எந்த முக்கியத்துவமும் வேண்டாம்.

ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல்... ஒரு நடிகனுக்கு அரசியலில் ஈடுபட என்ன தகுதி இருக்கு? இந்த நாட்ல எத்தனை ஜீவநதிகள் ஓடுதுனு சொல்லச் சொல்லுங்க. 'எத்தனை நதிகள் வற்றி வறண்டு காணாமல்போச்சுனு தெரியுமா?'னு கேளுங்க. 'இந்தியாவுல எத்தனை டேம் இருக்கு?'னு கேட்டுப் பாருங்க. வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் கலாசாரரீதியா என்ன வித்தியாசம்னு தெரியுமா?

சும்மா நாலு ரசிகர் மன்றங்கள் வெச்சு 50 பேருக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்துட்டா, அரசியலுக்கு வந்துரலாமா? வாட் இஸ் திஸ்? எனக்கு எந்தப் பயமும் இல்லை. நான் சொல்றதை அப்படியே போடுங்க. கர்நாடகா, கேரளாவில் இப்படிப் பண்ண முடியுமா? ஏன் தமிழ்நாட்ல மட்டும் இப்படி எல்லாம் நடக்குது?''.

சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரவே கூடாதா?

"சினிமாவில் இருந்து விலகி 10 வருஷம் மக்கள் மத்தியில் வேலை பார்த்து, சோஷியல் சர்வீஸ் எல்லாம் செய்து, மேடையில் பேசி அப்புறமாத்தான் அரசியலுக்கு வரணும். கோ அண்ட் வொர்க் ஃபர்ஸ்ட்!

நேத்து நடிக்க வந்துட்டு நாளைக்கு சி.எம் ஆக ஆசைப்படக் கூடாது. 20 வருஷமாவா ஒருத்தரை (ரஜினி) அரசியலுக்குக் கூப்பிட்டுட்டே இருப்பீங்க. வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்? அட்லீஸ்ட் முனிசிபாலிட்டி, பஞ்சாயத்துத் தேர்தல் நின்னு ஜெயிச்சுட்டு, அப்புறம் அரசியல் கட்சியில சேர்ந்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யட்டும்!".


இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.


மிஸ்டு காலா? 'மிஸ்' பண்ணுங்க, இல்லாவிட்டால் பணம் போய்விடும்!

வெளிநாட்டு எண்களில் இருந்து செல்போன்களுக்கு ‘மிஸ்டு கால்' கால்கள் வந்தால், அந்த எண்ணை திரும்ப அழைக்க வேண்டாம் என செல்போன் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இதனால் நுகர்வோரின் பணம் பறிபோய்விடும் என்பதால் மிஸ்டுகால்களை அழைப்பதில் எச்சரிக்கைத் தேவை என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்பது பழமொழி ஆனால் செல்போன் இல்லாத மனிதன் செல்லாக்காசு என்பது புதுமொழியாகிவருகிறது. அந்த அளவிற்கு தற்போது செல்போன் இன்றிமையாத ஒன்றாகிவிட்டது.

சராசரி மனிதன் தன்னுடைய இல்லத்திற்கு அன்றாட தேவையான சமையலுக்கு வாங்கித்தர பணம் இருக்கிறதோ இல்லையோ செல்போன் ரீசார்ஜ் செய்வது அன்றாட வாடிக்கையாக வைத்துள்ளான். இந்த செல்போன்கள் மூலம் நன்மைகள் பல இருந்தாலும் தீமைகள் பல உள்ளது. அதே வேளையில் நுகர்வோரை பணம் பறிக்க புது புது திட்டங்களையும். கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் காட்டி செல்போன் நிறுவனங்கள் பணம் பறிப்பதிலேயே குறியாக உள்ளனர். சில நிறுவனங்கள் மிஸ்டு கால் மற்றும் அழைப்பை துண்டித்தாலோ பணத்தை காலி செய்கின்றனர் இது ஒரு வணிக மோசடியே.

பெண் குரலில் பேசி மோசடி

இதையெல்லாம் விட பெண்ணின் குரலில் பேசி பணத்தை கறக்கும் வேலையும் நடைபெறுகிறது. தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவன செல்போனில் 239,243,246,960 போன்ற எண்களில் இருந்து மிஸ்டு கால் வரும். மிஸ்டுகாலை திரும்ப அழைத்தால் அழகான குரலில் பெண் கடலை போடுவார். மூன்று நிமிடம் பேசினால் பணம் அனைத்தும் காலிதான்.

இது ஒரு புறமிருக்க மெசேஜ் ஒன்று வரும். அதில் இரத்தம் தேவை. இந்த மெசேஜை பத்து பேருக்கு பார்வடு செய்தால் உங்களுக்கு போனசாக 100 ரூபாய் தரப்படும் என கூறி பேலன்சை காலி செய்யும் நிலையும் உள்ளது.

இது சம்பந்தமாக விளக்கம் அளித்த தொலைத் தொடர்புத்துறை உயர்அதிகாரி ஒருவர், ஆப்ரிக்கா, லிபியா, மலேசியா, தைவான் போன்ற நாடுகளில் ஒரு கும்பல் பணம் பறிக்க இந்த வேலையை செய்கிறார்கள். இதனை கண்டுபிடிப்பது சிரமம். அவர்களுடன் நெட்வொர்க் அமைத்து பணம் பறிக்கின்றனர். என விளக்கம் அளித்திருக்கிறார்.

நிறுவனம் எச்சரிக்கை

தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசங்களில் உள்ள சில செல்போன்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக இதுபோன்ற ‘மிஸ்டு கால்'கள் வந்ததாகவும், அந்த எண்களுடன் திரும்ப தொடர்பு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், வோடோ போன் நிறுவன பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார்.

வாடிக்கையாளர்களிடம் இருந்து இதுபோன்று வந்த புகார்கள் குறித்து அந்த நிறுவனம் விசாரித்து வருவதாக கூறிய அவர், அதுபோன்ற அழைப்புகளை பொருட்படுத்தி மீண்டும் தொடர்பு கொண்டு பேச வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். இனி மேல் மிஸ்டு கால் வந்தால் மறக்காம மிஸ் பண்ணிடுங்க சரியா!.

அம்மாவைச் சந்தித்தார் மு.க.அழகிரி...

 முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது தாயார் தயாளு அம்மாளை நேற்று இரவு கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினார்.

அதன் பின்னர் தனது தந்தை திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு வருவதற்கு முன்பு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் மு.க.அழகிரி.

அதைத் தொடர்ந்து அவர் தனித்து செயல்பட்டு வருகிறார். இருப்பினும் தற்போது மீண்டும் அவரை கட்சியில் சேர்க்க அழகிரி தரப்பைச் சேர்ந்த கருணாநிதியின் குடும்பத்தார் முயற்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் திமுக பொருளாளரும், அழகிரியின் தம்பியுமான ஸ்டாலின் கூறுகையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், விலகியவர்கள் மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்தால் மீண்டும் சேர்க்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அழகிரி, அந்த அதிகாரம் தலைவருக்கும், பொதுச் செயலாளருக்கும் மட்டும்தான் உள்ளது என்று கூறியிருந்தார். இந்த பின்னணியில் நேற்று இரவு கோபாலபுரம் வந்தார் அழகிரி. அங்கு தனது தாயார் தயாளு அம்மாளைச் சந்தித்துப் பேசினார்.

ஒரு மணி நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் அழகிரி அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அழகிரி தயாளு அம்மாளுடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், திமுக தலைவர் கருணாநிதி சிஐடி காலனியில் உள்ள ராசாத்தி அம்மாள் வீட்டில் இருந்ததாக தெரிகிறது. அழகிரி புறப்பட்டுப் போனவுடன் அவர் கோபாலபுரம் இல்லம் திரும்பினார்.