Friday, December 12, 2014

தலைக்கேற்ற கிரீடம் அமைந்துவிட்டால், தஞ்சை பெரிய கோவிலையே குனிந்து பார்க்க வைக்கிற அளவுக்கு மிரட்டுவார்

தலைக்கேற்ற கிரீடம் அமைந்துவிட்டால், தஞ்சை பெரிய கோவிலையே குனிந்து பார்க்க வைக்கிற அளவுக்கு மிரட்டுவார் ரஜினி. அப்படியொரு திரைப்படம்தான் லிங்கா! அறுபது வயதை கடந்த ஒருவரின் படத்தைதான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்கிற வியப்பை நிமிஷத்துக்கு நிமிஷம் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார் அவர். அந்தஅழகென்ன, ஸ்டைல் என்ன, நுணுக்கமான நடிப்பென்ன, கம்பீரமென்ன…! மூன்று மணி நேர படத்தின் மோடி மஸ்தான் ரஜினி. ரஜினி மட்டும்தான்! இன்னும் ஐந்து வருஷத்துக்கு … ஏன், அதற்கப்புறமும் கூட ரஜினியின் இடத்தை ஒரு சுள்ளானும் நினைத்துப் பார்க்க முடியாது போலிருக்கிறது.

லாக்கப்பில் இருக்கும் ரஜினியை தன் சொந்த சாமர்த்தியத்தில் பேக்கப் செய்து அழைத்துக் கொண்டு செல்கிறார் அனுஷ்கா. வெளியே போனால்தான் தெரிகிறது, தாத்தா ரஜினி கட்டிய கோவில் ஒன்றை பேரன் ரஜினி வந்து திறக்க வேண்டும் என்பது. அனுஷ்காவை அன்பினிஷ்காவாக விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிடலாம் என்று ரஜினி நினைத்தால், சுட சுட அவர் செய்த நெக்லஸ் திருட்டு ஒன்று விரட்டுகிறது. வேறு வழி? சில நாள் எஸ்கேப்பிசம் கருதி அனுஷ்காவுடன் தன் தாத்தா வாழ்ந்த கிராமத்திற்கே செல்கிறார். போன இடத்தில் தாத்தாவின் அருமை பெருமைகள் தெரியவர, பேரன் ரஜினியின் கடமைகள் என்ன? அதை செய்து முடித்தாரா என்பது க்ளைமாக்ஸ்.

முதலில் இந்த படம் குறுகிய கால தயாரிப்பு என்பதையே குறுகுறு பார்வையுடன் நோக்க வேண்டிருக்கிறது. படம் முழுக்க பிரமாண்டம்தான். அதுவும் தாத்தா ரஜினி ஒரு அணை கட்டுவதாக வருகிற காட்சிகள் எல்லாம் பணத்தை கொட்டி மனசை கொள்ளையடிக்கும் காஸ்ட்லி டெக்னிக்! நடுநடுவே கிராபிக்ஸ் கை கொடுத்தாலும், அந்த செட்..? சத்தியமாக சொல்லிவிடலாம், ரஜினியின் பிசினசில் கணிசமான பணத்தை கரைத்திருக்கும்.

அந்த இளம் ரஜினி, இப்போதிருக்கும் எல்லா ஹீரோக்களுக்கும் கூட சவால் விடுவார் போல. சந்தானம், கருணாகரன், பாலாஜி கோஷ்டிகளுடன் அவர் அடிக்கும் ரகளை செம ஸ்மார்ட். இடங்களை செலக்ட் பண்ணி திருடும் இந்த கோஷ்டியில், ரஜினி சொல்லும் ‘பறக்காஸ்…’ எதிலும் சேராத பஞ்ச் டயலாக் என்றாலும், அதை சொல்லும்போதெல்லாம் சிரிப்பு வருகிறது. நெக்லசை கொள்ளையடிக்க போன இடத்தில் அந்த கொஞ்சூண்டு இடத்தில் அனுஷ்காவும் ரஜினியும் சிக்கிக் கொள்வதும், குடு குடு ஓட்டத்துடன் ஓடி ஓடி ரஜினி திட்டம் போட்டு நெக்லசை அடிப்பதும் ரகளை. அந்த நேரத்திலும் கொஞ்சம் ரொமான்சை வழிய விட்டு அனுஷ்காவின் ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் போடுகிறார் டைரக்டர்.

இளைய ரஜினியின் துறுதுறுப்பை ரசித்து மீள்வதற்குள், அந்த பிளாஷ்பேக் ரஜினி என்ட்ரியாகிறார். அடடா… என்னவொரு லுக்? வெள்ளைக்காரனின் ராஜ்ஜியத்தில் ஒரு மாவட்டத்தின் கலெக்டர் இவர். விருட்டென்று தன் ராஜினாமாவை வீசிவிட்டு கிளம்பிவிடும் அவரை பிற்பாடு ஒரு மன்னராக காட்டும்போது அடடாவாகிறது தியேட்டர். தன் சொத்து முழுவதையும் அவர் அந்த அணைக்காகவும் மக்களுக்காகவும் செலவிட்ட பின்பும் ‘நம்ம மனுஷப்பயலுக எப்படியெல்லாம் நன்றி மறப்பானுங்க’ என்பதை போகிற போக்கில் போட்டுத் தாக்குகிறார் டைரக்டர். அணையை கல்லால் கட்டிவிட்டு அதற்கப்புறம் கட்டிய காட்சிகளையெல்லாம் சென்ட்டிமென்ட்டையே செங்கல்லாக அடுக்கி, ரஜினி பட ஃபார்முலாவை இன்னும் அழுத்தி பதிய வைக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

படம் முழுக்கவே ரஜினியின் ஒன்மேன் ஷோ என்றாகிவிட்ட பிறகும், அவரை மீறி ஸ்கோர் எடுக்கிற சாமர்த்தியம் ஒருவருக்கு மட்டும் இருக்கிறது. அவர்…? சந்தானம். மனுஷன் வாயை திறந்தால் தியேட்டர் கலீர் ஆகிறது. ஒரு காட்சியில் ‘நண்பேன்…’ என்று இவர் இழுத்து நிறுத்த, ரஜினியே அதை முடித்து வைக்கிறார் ‘…டா’ என்று! அந்தளவுக்கு ரஜினியின் இமேஜில் துக்குணுன்டு மண் கூட விழாமல் காப்பாற்றுகிறார்கள். சந்தானம் எல்லாரையும் உரசிப்பார்த்தாலும் ரஜினி விஷயத்தில் செம்ம்ம்ம்ம்ம அடக்கம். (அதுவும் நல்லதுதானே?) ஒரு டயலாக் வீச்சில் ரஜினிக்கு பி.எம். வரைக்கும் கூட பதவி கொடுக்க பரிசீலிக்கிறார் சந்தானம். ரஜினி விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அரசியலில் அவரை தள்ளாவிட்டால் அந்த வசனத்திற்கே விசனம் வருமோ என்னவோ?

சற்றே சதைப்பிடிப்புடன் இருக்கும் அனுஷ்காவும், அவரை விட டபுள் சதை பிடிப்புடன் இருக்கும் சோனாக்ஷியும் முறையே ரஜினியுடன் ஆளுக்கொரு டூயட் பாடி, அஜெண்டாவை நிறைவேற்றுகிறார்கள். அனுஷ்காவிடம் பிட்டிங் ஆகிவிடும் ரஜினி ஏனோ, சோனாக்ஷியிடம் முடிந்தவரை கட்டிங் ஆகி தள்ளியே நிற்கிறார். இருந்தாலும் அனுஷ்- ரஜினி ஜோடியை விட, சோனாக்ஷி -ரஜினி ஜோடி ரசிகர்கள் மனசை விரலால் தட்டி ‘உள்ள வரட்டா?’ என்கிறார்கள். விஜயகுமார், ராதாரவி என்று ரஜினி படத்திற்கேயுரிய செட் பிராப்பர்ட்டிகள் இந்த படத்திலும் உண்டு.

ரஜினியை புகழ்ந்து பாடும் அந்த வில்லேஜ் புலவனுக்கு ரஜினியும் திருப்பி சில பரிசுகள் அறிவிக்கிற காட்சியில், அவர் இந்த சமூகத்திற்கு எதையோ சொல்ல வருகிறார் என்பது மட்டும் புரிகிறது. அது என்னவா இருக்கும்?

ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் கேமிரா அனுஷ்காவை விட, சோனாக்ஷியை விட ரஜினி மீதுதான் அதிகம் கண் வைத்திருக்கிறது. அவரை இன்ஞ் இன்ஞ்சாக ரசித்திருக்கிறார் ரத்னவேலு. ரயில் ஃபைட் காட்சியில் சுற்றி சுழலும் அதே கேமிரா, மைசூர் மாளிகையின் அழகையும், அந்த அணைக்கட்டின் பிரமாண்டத்தையும் காட்டி வாய் பிளக்க வைக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை சற்றே கவலையோடுதான் அணுக முடிகிறது. ரஜினியின் அறிமுகப்பாடல் இதற்கு முன் எந்த படத்திலும் இந்தளவுக்கு சுமாராக இருந்ததில்லை. டூயட்டுகளில் அனுஷ்காவுக்கு அதிர்ஷ்டமில்லை. ஆனால் சோனாக்ஷியுடன் ரஜினி பாடும் சின்ன சின்ன நட்சத்திரம் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது. ரஹ்மானின் குரலில் ஒலிக்கும் இந்தியனே… மற்றுமொரு வந்தேமாதரம்.

ஒரு யதார்த்தமான கதையில் இப்படியொரு நம்ப முடியாத கிளைமாக்ஸ் தேவையா என்கிற கேள்வி எழாமல் இல்லை. இந்த கதை அப்படியே பென்னிகுயிக்கின் கதையை தழுவி எடுக்கப்பட்டிருப்பதால், அந்த மகா மனிதனுக்கு டைட்டிலில் ஒரு கவுரவம் தந்திருக்கலாம்.

லெங்த்தோ லெங்த் என்று படம் குறித்து அஞ்ச வேண்டியிருந்தாலும், ரஜினி என்கிற மூன்றெழுத்து மந்திரம் என்னவோ தந்திரம் செய்து எல்லாவற்றையும் மறக்கடிக்கிறது.

லிங்கா- ரஜினி பக்தர்களுக்கு மட்டும் ரிவர் கங்கா!

இந்துவாக மதம் மாறினால் ரூ.5 லட்சம் அன்பளிப்பு அறிவிப்பு

'தரம் ஜக்ரன் சமிதி' என்ற இந்து அமைப்பு, இந்துவாக மதம் மாறும் கிறிஸ்தவருக்கு ரூ.2 லட்சமும், இந்துவாக மதம் மாறும் முஸ்லிம்க்கு ரூ.5 லட்சமும் அன்பளிப்பு வழங்கப்படும் என்று சர்ச்சைக்குரிய கடிதம் ஒன்றை உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதியில் வினியோகித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதியில் 'தரம் ஜக்ரன் சமிதி' (Dharam Jagran Samiti) என்ற இந்து அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட கடிதம் அம் மாநிலத்தின் பல இடங்களில் வினியோகிக்கப் பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், இந்துவாக மதம் மாறும் கிறிஸ்தவருக்கு ரூ.2 லட்சமும், இந்துவாக மதம் மாறும் முஸ்லிம்க்கு ரூ.5 லட்சமும் அன்பளிப்பு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்துக்களாக இருந்து பிற மதத்திற்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் சொந்த மதத்துக்கு திரும்பும் நிகழ்ச்சி அலிகாரில் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தின் 20 மாவட்டங்களில் இருந்து 40,000 பேர் இந்து மதத்துக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் மேற்கு உத்தரபிரதேசம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் மத கலவரத்தால் பாதிக்கப்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பிய முசாபர் நகரிலும் விநியோகிக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேயர் துரைசாமி மகனிடம் இருந்து மனைவி, மகளை மீட்டு தரக்கோரி கணவன் வழக்கு

மேயர் சைதை துரைசாமியின் மகனிடம் இருந்து மனைவி, குழந்தையை மீட்டு தரும்படி உயர் நீதிமன்றத்தில் கணவன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்  நேரில் ஆஜரான அவரது மனைவி, என்னை யாரும் கடத்தவில்லை என்று மறுத்துள்ளார்.


சென்னை ஐகோர்ட்டில், கோடம்பாக்கத்தை சேர்ந்த ராகேஷ் (35) என்பவர்  தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மருத்துவ உபகரண பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன்.

எனக்கு சவுமியா (வயது 28) என்ற  மனைவியும், நைஷா என்ற 5 வயது மகளும் உள்ளனர். என் மனைவி, நாய்களுக்கு உணவு பொருள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்துகிறார். இதனால், நாய்  கண்காட்சி நடத்தும் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.


அதன்படி, அந்த அமைப்பின் நிர்வாகியும், சென்னை மேயர் சைதை துரைசாமியின்  மகனுமான வெற்றி துரைசாமியுடன் என் மனைவிக்கு நட்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாக இருவரும் பழகினார்கள். பின்னர் கடந்த ஜனவரி மாதம் முதல், என்  மனைவியுடன் அவர் நெருக்கமாக பழகத் தொடங்கினார்.

இதனால் கோடம்பாக்கத்தில் சொந்த வீடு இருந்தும், செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள வாடகை வீட்டுக்கு மாறினார். நான் எதிர்ப்பு தெரிவித்தும், அவர் கேட்கவில்லை.  வெற்றி துரைசாமியுடன் உள்ள பழக்கத்தை கைவிடவும் அவர் மறுத்து விட்டார்.

இந்நிலையில், 5 வயது என் மகளை வெற்றி துரைசாமி என்னிடம் அழைத்து வந்து,  தன்னோடு இருக்கும்போதுதான் குழந்தை சந்தோஷமாக இருக்கிறது என்று கூறி சென்றார்.

என்னுடைய அமைதியான, சந்தோஷமான இல்லற வாழ்க்கையை  வெற்றிதுரைசாமி சீரழித்து வருகிறார். தற்போது, என் மனைவி, மகள் ஆகியோரை சட்டவிரோதமாக பிடித்து வைத்துள்ளார்.

இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, என் மனைவி, மகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, என்னிடம் ஒப்படைக்க போலீஸ் கமிஷன ருக்கு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், டி.மதிவாணன் ஆகியோர் நேற்று விசாரித்து, மனுதாரரின் மனைவி, மகளை வருகிற 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த  வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில், சவுமியா தனது மகளுடன் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நேரில் வந்தார். அதே நீதிபதிகள் முன்பு  அவரது வக்கீல் ஆஜராகி சவுமியாவை யாரும் கடத்தவில்லை நேரில் ஆஜராக வந்துள்ளார் என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளிவைக்கிறோம்.  அப்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்று சவுமியா வக்கீல் செந்தில் கூறினார்.


நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த சவுமியா பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, என்னை யாரும் கடத்தவில்லை, நான் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதுபற்றி நீதிபதிகளிடம் நேரில் தெரிவிப்பேன் என்றார்.

நாச்சிக்குப்பத்தில் பிறந்த ரஜினி நாடாளக்கூடாதா?

ஒரு ப்ளாஷ்பேக்… 1989-ம் ஆண்டு நடந்த விழா அது. அன்றைய முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, இயக்குநர் பாலச்சந்தர் என பலரும் பங்கேற்ற விழா.

ரஜினி பேசுகிறார்…

“என்னைப் பற்றிச் சொல்வார்கள் `கன்னடக்காரன், தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறான்’ என்று. உண்மைதான். ஆனால் ஆராய்ந்து பார்த்தால், அதில் இன்னும் சில விஷயங்கள் தெரியவரும்.

எங்களுடைய பூர்வீகம் கிருஷ்ணகிரி. என் தந்தை கிருஷ்ணகிரியிலுள்ள நாச்சிக்குப்பம் கிராமத்தில் பிறந்தவர், வாழ்ந்தவர். அதே மண்ணில்தான் நானும் பிறந்தேன். கிருஷ்ணகிரி தமிழ்நாட்டில் உள்ளது.

நான் தெய்வமாக வழிபடும் ஸ்ரீராகவேந்திரா சுவாமி, ஒரு தமிழர். ஆன்மீகத்தில் நான் குருவாக வழிபடும் ரமண மகரிஷி ஒரு தமிழர்.
சிவாஜி ராவாக இருந்த எனக்குப் பெயர் சூட்டி, தமிழ் கற்றுத்தந்து, எனக்கு மறுவாழ்வு கொடுத்து, என்னைத் தத்தெடுத்து அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் அவர்கள் தமிழர்.

ஆரம்பத்திலிருந்தே என்னைச் சினிமாவில் சேரச்சொல்லி ஊக்கப்படுத்திய என் ஆப்த நண்பர் ராஜ்பகதூர் தமிழன்.

வாழ்நாள் முழுவதும் துணைவருவதாகக் கூறி, என் வீட்டில் விளக்கேற்றிய என் மனைவி லதா ஒரு தமிழச்சி.

என் குழந்தைகள் வாய் திறந்தவுடன் பேசிய முதல் வார்த்தை, தமிழ்.
எனக்கு அன்பையும், ஆதரவையும் அள்ளிக்கொடுத்து, என்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கும் என் உயிரினும் மேலான ரசிகப்பெருமக்கள் தமிழர்கள்.

அப்படியென்றால் நான் யார்? நீங்களே சொல்லுங்கள்!”

ரஜினியின் இந்தக் கேள்விக்கு அமரர் வாழப்பாடி ராமமூர்த்தி சொன்ன பதில்… ‘எங்கள் மண்ணின் மைந்தர்’! என்றார்.

அதைத் திருத்திய கருணாநிதி…’அவர் தமிழகத்தின் மைந்தர்’ என்றார்.

நாச்சிக்குப்பமும் ரஜினியும்

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் அவர் பிறந்த நாளும் அவர் நடித்த படமும் ஒரே நாளில் வந்திருப்பது இதுதான் முதல் முறை.

இந்த ஆண்டும் அவரது அரசியல் வருகை பற்றிய பேச்சு எழுந்து பரவிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த முறை மத்தியில் பி.ஜே.பி. அரசு அமைந்திருப்பதும் நரேந்திர மோடியுடன் ரஜினிக்கு இருக்கும் நட்பும் கூடுதல் பலமாக சேர்ந்து கொண்டு ரஜினியின் அரசியல் பிரவேசப் பேச்சுக்கு வலு சேர்த்திருக்கிறது.


 ரஜினி அரசியலுக்கு வந்தால் வெற்றி தோல்வி என்பது ஒரு பக்கமிருந்தாலும், அவர் அரசியல் பிரவேசம் செய்தால் இப்போது அரசியல் சந்தையில் கடை போட்டிருக்கும் பல பழுத்த வியாபாரிகள் தங்கள் கடையை மூட்டை கட்ட வேண்டிய நிலை வரும் என்பதுதான் உண்மை.


 ரஜினி எப்போது அரசியல் பற்றி பேசினாலும், யாரையாவது வைத்து அவருக்கு ஒரு வித தயக்கத்தை ஏற்படுத்துவார்கள். ‘உங்களி விட சீனியர் உங்கள் நண்பர் அரசியல்ல இருக்கார். அவரை எதிர்த்து எப்படி நீங்கள் அரசியல் செய்ய முடியும்' என்று ரஜினியின் காதில் போட்டு வைப்பார்கள். இன ரீதியாக அவரை தனிமைப்படுத்தும் முயற்சி இது.


காரணம் ரஜினியிடம் நேரடியாக ‘நீ அரசியலுக்கு வந்தால் கர்நாடக முத்திரை குத்திவிடுவோம்'; என்று சொல்ல முடியாதல்லவா. இப்படிதான் ஒவ்வொரு முறையும் ரஜினியை அடக்கி வைத்தார்கள், அரசியல்வாதிகளின் தூதுவர்களாக செயல்படும் வெள்ளித்திரை வியபாரிகள்..


லிங்கா படவிழாவிலும் இதுதான் நடந்தது. கூட்டமே ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்புக்கு ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்க, இடையில் பேச வந்த வைரமுத்து ‘ரஜினியை நீங்கள் கடவுள் என்கிறீர்கள், தேவதூதர் என்கிறீர்கள், வருங்கால முதல்வர் என்கிறீர்கள்.. ஆனால் தான் யார் என்பது ரஜினிக்குத் தெரியும்' என்று பேசுகிறார். இது ரஜினிக்கு மறமுகமாக விடப்பட்ட மிரட்டலாகவே அங்கிருந்த ரஜினி ரசிகர்கள் பார்த்தார்கள்.


ஆனால் ரஜினி பேசும்போது. "நான் அரசியலுக்கு வரணும்னு எல்லோரும் பேசுறீங்க. அது பிரச்சனையில்ல. அப்படி வந்து பலரையும் மிதித்து அந்த இடத்துக்குப் போயி உங்களுக்கு நல்லது செய்ய முடியுமான்னுதான் யோசிக்கிறேன்," என்று நீண்ட நாளைக்குப்பிறகு அரசியல் குறித்து கொஞ்சம் வெளிப்படையாகவே பேசினார்.


தன்னுடைய அரசியல் பிரவேசத்தால் அதிகம் பாதிக்க[ப்படப்போவது யார் என்பது ரஜினிக்கும் தெரியும். அதனாலும் அமைதி காத்தார். ரஜினி மீது அரசியல்வாதிகள் ஏவும் பிரமாஸ்திரமான கர்நாடக அம்பும் முறிந்து போய் பல நாட்களாகி விட்டன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ரஜினி பிறந்தது தமிழகத்தின் எல்லையில் அமைந்திருக்கும் கிருஷணகிரியில் இருக்கும் நாச்சிக்குப்பம் என்ற குக்கிராமம்.


இங்கு ரஜினியின் அம்மா, அப்பா வசித்த வீடும் ரஜினி பிறந்த வீடும் இப்போதும் பாழடைந்த நிலையில் இருக்கின்றன. அந்த வீட்டிற்குள் போனால் இப்போதும் குடும்ப உறுப்பினர்க்ளோடு ஒரு ஓரத்தில் சிவாஜி ராவாக ரஜினி நிற்கும் பழைய போட்டோவைப் பார்க்களாம்.

இந்த தமிழ் மண்ணில் பிறந்த தமிழன்தான் ரஜினி என்பதற்கு அந்த கிராமத்தில் நிறைய சாட்சிகள் இப்போது இருக்கிறது. ரஜினியின் உறவின் நினைவாக இன்றும் அந்த வீட்டில் அவரது தாய் வழி உறவினர்கள் வசித்து வருகிறார்கள்.

அதே கிராமத்திற்கு ரஜினி பொது மக்களுக்கு பயன்படும் வகையில் உயர்நிலை குடிநீர் தொட்டியும் கட்டிக்கொடுத்திருக்கிறார். மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கு தனியாக தாகம் தீர்க்க வழி செய்திருக்கிறார். இன்னும் தன்னுடைய தாய் தந்தையர் நினைவாக திருமண மண்டபம் கட்ட ஆரம்ப கட்ட பணிகளையும் செய்து வைத்துள்ளார்.

காலம் யாரை எங்கு எப்போது கொண்டு வந்து நிறுத்தும் என்று சொல்ல முடியாது. இலங்கையில் பிறந்த எம்.ஜி.ஆரே நம் இதயத்தில் வாழும்போது தமிழ்நாட்டில் நாச்சிக்குப்பத்தில் பிறந்த ரஜினி நாடாளக்கூடாதா என்ன?

பிரியங்கா படத்தை செல்போனில் பார்த்த எம்.எல்.ஏ-வுக்கு ஆப்பு வைச்சாச்சி..!

சட்டசபையில் அமர்ந்து தனது செல்போனில் ஆபாச கோணத்தில் பிரியங்கா காந்தி படத்தை பார்த்த பாஜக எம்.எல்.ஏ பிரபு சவானை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் காக்கோடு திம்மப்பா உத்தரவிட்டார்.

இனிமேல் பேரவைக்குள் யாரும் செல்போன் கொண்டுவரக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி சட்டசபை கட்டிடத்தில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பேரவை கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவின் அவுராத் தொகுதி எம்.எல்.ஏ தனது செல்போனில் உள்ள படங்களை பார்த்தபடி இருந்தார்.


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தியின் படமும் அந்த செல்போனில் இருந்தது. பிரியங்கா காந்தி, பேண்ட், சட்டை போட்டிருந்த படம் அவரது செல்போனில் இருந்தது. அந்த படத்தை ஜூம் செய்த எம்.எல்.ஏ சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஜூம் செய்தது முகத்தை அல்ல. ஆபாசமான கோணத்தில் கழுத்தின்கீழே அவர் ஜூம் செய்து வைத்திருந்தார்.  (வீடியோ)

 சபையின் மாடத்தில் இருந்து அவை நடவடிக்கைகளை வீடியோவில் பதிவு செய்த கன்னட செய்தி சேனல் வீடியோகிராபர்கள் இதை படம் பிடித்து ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர். இதனால் பாஜகவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 உடனடியாக பிரபு சவானை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சபாநாயகருக்கு கோரிக்கைவிடுத்தது.


நேற்று நாள் முழுவதும் இதே பிரச்சினையை எழுப்பி ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதனிடையே இன்று சட்டசபையில் மீண்டும் அதே பிரச்சினை எழுந்தது. பாஜக சட்டசபை குழு தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்.எல்.ஏ யதேர்ச்சையாக அப்படத்தை பார்த்ததாக கூறினார்.

ஆனால் சமாதானத்தை ஏற்க மறுத்த சபாநாயகர் காக்கோடு திம்மப்பா, பிரபு சவானை நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாகவும், உடனடியாக அவர் பேரவையை விட்டு வெளியேறும்படியும் உத்தரவிட்டார்.


மேலும், 2012 டிசம்பர் 7ம்தேதி கர்நாடக சட்டசபை கூட்டுக் குழு அளித்த பரிந்துரைப்படி, சட்டசபைக்குள் இனிமேல் செல்போன்களுக்கு அனுமதி கிடையாது. எந்த உறுப்பினரும் செல்போனை உள்ளே கொண்டுவரக்கூடாது என்றும் சபாநாயகர் உத்தரவிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜோதிடர்கள் மாத்திரமே எஞ்சியுள்ளனர்: மைத்திரிபால சிறிசேன

 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜோதிடர்கள் மாத்திரமே தற்போது எஞ்சியுள்ளனர் என்று பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பன்னல பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள அரசாங்கம் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் அரசாங்கம் அல்ல என்று கூறியுள்ள மைத்திரிபால சிறிசேன, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருப்பதிக்குச் சென்று திரும்பும் போது, அந்த தெய்வத்தை வணங்கும் பக்தர்கள் இருவர் எங்கள் வசம் வந்துவிட்டனர்” என்றுள்ளார்.