Friday, December 5, 2014

ரோட்டக் சகோதரிகள் வாலிபர்களை அடித்தது நாடகமா?

 நாடு முழுவதும் இந்த வார துவக்கத்தில் இருந்து கதாநாயகிகளாக பார்க்கப்பட்ட அரியானா சகோதரிகள் பஸ்சில் பயணம் செய்த வாலிபர்களை வேண்டும் என்றே அடித்தார்களா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

முன்னதாக சகோதரிகள் இருவரிடம் மூன்று வாலிபர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால் போலீஸ் விசாரணையின் போது இளைஞர்கள் மூவரும் தாங்கள் அப்பாவிகள் என்றும், இரு சகோதரிகளிடம் எவ்வித அத்துமீறலிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்தனர். மேலும் அப்பெண்கள் மூன்று வாலிபர்களை அடிக்கும் போது, கர்ப்பிணி பெண் ஒருவர் அக்காட்சிகளை படமெடுத்தாக கூறப்பட்டது. ஆனால் அந்த பெண்ணை இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் சகோதரிகள் இருவரும் பூங்கா ஒன்றில் வாலிபரை அடிக்கும் மற்றொரு வீடியோ காட்சி வெளியானது. இதற்கு பின் பேசிய அப்பெண்கள் தங்களை அநாகரிகமாக பேசிய வாலிபரை தாக்கியதாக அவர்கள் தெரிவித்தனர். இதையும் யாரோ ஒருவர் படம் பிடித்ததாக இருவரும் கூறினார்கள். இந்த வீடியோவையும் யார் எடுத்தார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. சகோதரிகள் இருவர் மட்டும் சம்பந்தப்பட்ட வீடியோக்களை யார் தான் எடுத்தார்கள் என்பதற்கு சரியான விடையும் கிடைக்கவில்லை. இரு சகோதரிகளும் ஏறக்குறைய 2000 வாலிபர்கள் தங்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளது பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அதே சமயம் மூன்று வாலிபர்களை கைது செய்து விசாரித்து வரும் காவல்துறை அதிகாரிகள் முன், பேருந்தில் வந்த வயதான பெண்மணி ஆஜரானார். அவர் மூன்று வாலிபர்களும் எவ்வித தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் பேருந்தின் நடத்துனரோ, அப்பெண்கள் இருக்கைக்கு அருகே நிற்காமல் விலகி செல்லும்படி மூன்று வாலிபர்களிடமும் கூறியதாக தெரிவித்தார். இந்த நிலையில் அம்மாநில முதல்வர் கத்தாரை சந்தித்த மூன்று மாணவர்களின் குடும்பத்தினர், இரு தரப்பையும் தீர விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அப்போது அவர், விசாரணை யாருக்கும் சாதகமாக இல்லாமல் நேர்மையாக நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும் சகோதரிகள் இருவருக்கும் வழங்கப்படுவதாக இருந்த பரிசுத்தொகையை காவல்துறை விசாரணை முடியும் வரை நிறுத்தி வைக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment

Blog Archive