Friday, December 19, 2014

மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்கு சல்மான் கான்...?

 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இருந்து பல பாடங்களை கற்றே தாம் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாக முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவும் கலந்து கொண்டமை இங்கு விசேட அம்சமாகும்.

மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார். ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் இதனை மேற்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ, அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தல் சட்டங்களை மீறி வருவதாக தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பிரசாரங்களுக்காக இந்தியாவில் இருந்து கலைஞர்கள் அழைத்து வரப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கை கலைஞர்கள் தற்போது இல்லை. அரசாங்கம் சல்மான்கானை இலங்கைக்கு அழைத்து வரவுள்ளது. சல்மான்கானை அழைத்து வந்து நாமல் பேபின் தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்த உள்ளனர்.

மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்கு வருமாறு சல்மான் கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதை பேஸ்புக்கில் பார்த்தேன். தற்போது இலங்கை கலைஞர்களால் அரசாங்கத்திற்கு பயனில்லை. இதனால் இந்தியாவில் இருந்து கலைஞர்களை வரவழைக்க உள்ளனர் எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

கேபியின் உடல் நிலையும்..... மீடியாக்களின் ‘கொலை’ப் பசியும்!

கடந்த சில நாட்களாக சினிமா வட்டாரத்திலும் மீடியாக்கள் வட்டாரத்திலும் பெரிய பரபரப்பு ஏற்படுத்திய செய்தி தமிழ் சினிமாவின் பிதாமகன் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் உடல் நிலை பற்றியதுதான்.

இது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், அதைவிட பெரிய அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது இந்த விஷயத்தில் சில மீடியாக்களின் அநாரீகமான அணுகுமுறை. இரண்டு நாட்களுக்கு முன் கே.பி அவர்கள் லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆழ்வர்பேட்டை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தகவல் சில விஷமிகள் மூலம் வாட்ஸ் அப்பில் கே.பி இறந்து விட்டதாகவே ( மன்னிக்கவும்) பரபரப்பப்பட்டது. உடனே ஒட்டு மொத்த மீடியாக்களும் தங்கள் ஊழியர்களை மருத்துவமனையில் குவித்தன.

தொலைக்காட்சி மீடியாக்களும் கேமாராக்களுடன் மருத்துவமனை முன்பு அணிவகுத்தன. திரையுலக பிரபலங்கள் ஓவ்வொருவராக வர ஆரம்பித்தனர். பத்திரிகையாளர் ஒவ்வொருவரிடமும் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தனர்.

அனைவரும் கே.பி. சார் நலமாக உள்ளார் என்ற தகவலை சொன்னார்கள்.ஆனால் மீடியாக்காரர்கள் யாரும் அவர்கள் சொல்லுவதை நம்பத் தயாராக இல்லை. அதனால் அவர்களிடம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தனர்.

இதல் சிலர் கோபமாகி அந்த இடத்தை விட்டு கிளம்பிச் சென்றனர். ரஜினி வந்த போதும் ‘சார் நல்லா இருக்காங்க சீக்கிரம் குணம்டைஞ்சு வருவாங்க' என்று சொன்ன போதும் மீடியாக்களின் முகத்தில்! என்ன இது.. இன்னும் நாம் எதிர்பார்த்த நியூஸ் வரவில்லையே என்பது போல் பெரிய ஏமாற்றம் தெரிந்தது.

சிறிது நேரத்தில் குஷ்பூ அங்கு வந்தார். பதட்டத்துடன் உள்ளே சென்றவர் கே.பியை பார்த்த்போது, ‘கமாண்டிங் பவரோடு எத்தனை படைப்புகளை கொடுத்த சாதனை மனிதர் இப்படி இருக்கிறாரே' என்று ஆதங்கப்பட்டு வரும்போது அழுத கண்களை துடைத்தபடியே வந்தார்.

அவ்வளவுதான் மொத்த பத்திரிகையாளர்களும், "ஆமா... சார் போட்டுறலாம் சார்.. குஷ்பூ கதறி அழறாங்க சார்" , என்றும் இன்னும் சிலர் "மைலாப்பூர் வீட்லேயே வெச்சிருவாங்கா சார். நாளைக்குதான் மற்ற விஷயம். " என்றும், "பெசண்ட் நகர் இல்லன்னா கிருஷ்ணாம்பேட்டை.. இன்னும் தெரியலை சார்" என்றும் நம் காதுபடவே சிலர் செல்போனில் சொல்லிக்கொண்டிருந்ததையும் கேட்க முடிந்தது.

இதையெல்லாம் பார்க்கும்போது கவலையாகவும், வெட்கமாகவும் கூட இருந்தது. ஒரு செய்தியை முதலில் வெளியிடுவது என்பது மீடியாக்களின் தொழில் சம்மந்தபட்ட விஷயம் என்றாலும், எந்த மாதிரியான செய்தியை முதலில் சொல்ல வேண்டுமென்கிற அடிப்படை தர்மம் வேண்டாமா.

எண்பத்தி நான்கு வயதில் ஒரு மனிதர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டால் அது மரணத்திற்காக மட்டுதான் இருக்க முடியுமா? ஒரு வயதானவருக்கு இயல்பாக என்ன பிரச்சனைகள் வருமோ அப்படிப்பட்ட பிரச்சனைகளுக்காக இருக்கக்கூடாதா? இதில் கொடுமை என்னவென்றால் குஷ்பூ வெளியில் வந்து "சார் நல்லா இருக்காக்ங்க" என்றதும் சிலர் "என்ன மேடம் சொல்றீங்க நல்லா இருக்காரா?" என்று முகத்தில் அதிர்ச்சியை காட்டி அவசர அவசரமாக அவரது அலுவலகத்திற்கு போன் பண்ணி கே.பியை பற்றி தான் சொன்ன தகவலைத் திருத்துகிறார்.

மரணத்தைக்கூட முதலில் நாம்தான் சொல்ல வேண்டும் என்கிற இந்த அநாகரீக அரிப்பு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதற்கு சில சம்பவங்கள். காமெடி மன்னன் கவுண்டமணி சில வருடங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தகவல் வெளியானதும் இந்தியா முழுவதும் வெளிவரும் ஒரு முன்னனி ஆங்கில நாளிதழ் நடத்தும் இணைய தளம், பிரபல வார இதழ் நடத்தும் இணையதளத்திலும் கொட்டை எழுத்தில் கவுண்டமணி மரணம் என்று செய்தியைப் போடு விட்டு மார்தட்டிக்கொண்டது. ஆனால் சிகிச்சை முடிந்து கவுண்டமணி நலமாக வீட்டுக்கு திரும்பி விட்டார்.

அன்று தற்செயலாக இதைக் கேள்விபட்டு கவுண்டமணி தன்னுடைய நக்கல் நடைலில் அந்த நபர்களை காய்ச்சி எடுத்திருக்கிறார். இதே போல் இன்னொரு பத்திரிகையில் தயாரிப்பாளர் நடிகர் பாலாஜி அவர்கள் இறந்து விட்டதாக செய்தி வந்து விட்டது. மறுநாள் அந்த அலுவலகத்திற்கு ஒரு போன் வந்திருக்கிறது.

போனை எடுத்த ஊழியார் "ஹலோ யார் பேசறது" என்க, மறுமுனையில் "நான் தான் செத்துப்போன பாலாஜி பேசுறேன்" என்று சொல்லவும் அந்த ஊழியர் ஆடிப்போய் விட்டார். சமீபத்தில் எம்.எஸ்.பாஸ்கர் மறைந்து விட்டதாக வாட்ஸ் அப்பில் தகவல் வந்தது.

அன்று மாலை நடந்த சினிமா விழாவில் எம்.எஸ்.பாஸ்கரே கலந்து கொண்டு "நான் இறந்த பாஸ்கர் பேசுகிறேன்" என்று வேதனையுடன் தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். இப்படி மீடியாவின் 'கொலை‘ப்பசிக்கு பலியானவர்களில் கலைஞர், மனோரமா, என்று ஒரு பட்டியலே இருக்கிறது. இனிமேலும் இந்த பட்டியல் நீளக் கூடாது என்பதுதான் நமது கவலை.

அதனால் பத்திரிகைகள் இதுபோன்ற தகவல்களை தாமதமாகக் கொடுத்தாலும் தவறில்லை என்ற மன நிலைக்கு வரவேண்டும். கே.பி பற்றி எதிர்மறைத் தகவலை முதலில் சொல்வது மட்டும் மீடியாக்களின் கடமை அல்ல. அவர் தமிழ் சினிமாவிற்கு ஆற்றிய பங்களிப்பும், யாரும் சொல்லத் துணியாத கருத்துக்களை தைரியமாக திரையில் சொன்ன அவரது துணிவும், அவரது ஆளுமையும், புரட்டிப்போட்ட புரட்சிகரமான கருத்துகளையும் இந்த தலைமுறையினருக்கு தெரியும் வகையில் சொல்ல வேண்டியதும் மீடியாக்களின் கடமைதானே.

அவர் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நாளிலிருந்து இன்று வரைக்கும் ஒவ்வொரு நாளும் அதை எழுத ஆரம்பித்திருந்தாலே அதைப் படித்த அல்லது படித்தவர்கள் வாய்வழி பரவும் அந்த பாஸிடிவ் வைப்ரேஷனிலேயே பாலசந்தர் எழுந்து நடந்து வந்திருப்பார்.

ஆனால் மீடியாக்களுக்கு தேவை கே.பாலசந்தரின் உயிரற்ற உடல் தானே தவிர தமிழ் சினிமாவிற்கு உயிர் கொடுத்த துணிச்சலான அவரது கருத்துகள் அல்ல என்றல்லவா ஆகிவிட்டது!

நடந்ததை மறந்துவிடுங்கள்: தமிழர்களிடம் கெஞ்சும் ராஜபட்ச

இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரை மறந்து, நாட்டு முன்னேற்றத்துக்காக ஒன்றுபட வேண்டும் என இலங்கைத் தமிழர்களுக்கு அந்த நாட்டு அதிபர் ராஜபட்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் இதுவரை இல்லாத வகையில் மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்குப் போட்டியிடும் அவர், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முல்லைத்தீவு நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியதாவது:

ஈரான், லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் அரசுக்கு எதிரான போராட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுள்ளது.

அதைப் போன்ற நிலை நமது நாட்டுக்கு ஏற்படக்கூடாது.

நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

நடந்தவற்றையெல்லாம் மறந்துவிட்டு, நாட்டு வளர்ச்சிக்காக தமிழர்கள் ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும் என்றார் அவர்.

போரின் துயரங்களிலிருந்து அந்தப் பகுதி மக்கள் இன்னும் மீளாத நிலையில், தனது உரையில் விடுதலைப்புலிகளுடனான போர் குறித்து பேசுவதை அவர் தவிர்த்தார்.

பாக். சிறைக்குள்ளேயே "குடும்பம் நடத்தி" தந்தையான தீவிரவாதி 'லக்வி'- திடுக் தகவல்

மும்பை தாக்குதலின் சூத்திரதாரியான ஷகி உர் ரஹ்மான் லக்வி சிறையில் இருந்தாலும் சிறப்பு சலுகைகளுடன் சொகுசாக வாழ்ந்து அங்கே "குடும்பம் நடத்தி" "குழந்தைக்கு தந்தையான"தாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

2008 ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி மும்பையில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 166 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின் மூளையாக இருந்த லஷ்கர் இ தொய்பாவின் ஹபீஸ் சயீத். இச்சதியை செயல்படுத்தியது ஷகி உர் ரஹ்மான் லக்வி.

 இந்தியாவின் நீண்ட வலியுறுத்தலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடைபெற்ற 'மும்பை தாக்குதல் வழக்கில்' லக்வி சேர்க்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறான்.

அப்போது லக்வி, ஒரு குழந்தைக்கு தந்தை என்ற தகவல் ஏதும் இல்லை. பின்னர் 2010 ஆம் ஆண்டு சிறையில் இருந்தபடியே அபு ஜிண்டால் உள்ளிட்ட சக தீவிரவாதிகளைத் தொடர்பு கொண்டு தனக்கு குழந்தை பிறந்த செய்தியை பகிர்ந்து கொண்டிருக்கிறான் அவன். 2 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய அபு ஜிண்டாலை இந்தியா கைது செய்தது.

மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு இந்தியர்களை கொல்ல உத்தரவுகள் பிறப்பித்ததும் அபு ஜிண்டால்தான்.. அவனுக்கு இந்தி கற்றுக் கொடுத்ததும் ஜிண்டால்தான்.. அபு ஜிண்டாலிடம் தேசிய புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்திய போது லக்வியுடனான தொடர்புகளை விவரித்துள்ளான்.. "2010ஆம் ஆண்டு சிறையில் இருந்து அவன் எனக்கு போனில் பேசினான்.

அப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.. தான் ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்டதாகவும் கூறினான். தனது இளம் மனைவி சிறையில் தன்னுடன் தங்கி இருக்க சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்றான். நானும் அவனுக்கு வாழ்த்து தெரிவித்தேன்" என்று கூறியிருந்தான் ஜிண்டால். இதை இந்திய அரசும் உறுதிப்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் அரசிடம் கேள்வி எழுப்பியது.

ஆனால் இதுநாள் வரை பாகிஸ்தானிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. இத்தனைக்கும் சிறையில் ஆர்டரலி வசதி, தொலைக்காட்சி மற்றும் தொலைத் தொடர்பு வசதிகளுடன் லக்வி சுதந்திரமாக இருப்பதற்கான ஆதாரங்களையும் இந்தியா கொடுத்தும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் லக்விதான் முக்கியம்.

 லஷ்கர் தொ தொய்பா இயக்கத்தின் மூத்த தளபதி என்பதால் சிறப்பு சலுகைகளை அவனுக்கு அந்நாட்டு அரசு அளித்தது. இப்படி லக்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாகிஸ்தான் தற்போது, மும்பை தாக்குதல் வழக்கில் அவனுக்கு எதிராக போதுமான சாட்சியம் இல்லை என்று கூறி ஜாமீன் வழங்கியிருப்பது ஆச்சரியப்படுத்தவதற்கில்லைதான்..

 நமது நாட்டின் உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்களின்படி லக்வி முழுமையாக சிறைவாசத்தை அனுபவித்தது இல்லையாம்; வெளியில் சுதந்திரமாக சென்று வர அனுமதிக்கப்பட்டிருக்கிறது.. அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டிருந்ததாம்.

மும்பை தாக்குதல் வழக்கில் அவனுக்கான தொடர்புகள் குறித்து இந்தியா ஏராளமான ஆதாரங்கள் வழங்கியிருந்தும் பாகிஸ்தான் அவனுக்கு இத்தனை சுதந்திரம் கொடுத்திருக்கிறது. மும்பை தாக்குதல் வழக்கில் லக்விக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்கா கூட கூறியது..ஆனாலும் பாகிஸ்தானிடம் இருந்து எந்த பதிலும்தான் இல்லை.. அவனுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது.. அவன் மீது யாரும் தாக்குதல் நடத்தி விடக் கூடாது என்று பாதுகாக்கவே சிறையில் அடைப்பது போல் பாகிஸ்தான் நாடகமாடியிருக்கிறது என்பதுதான் உளவுத்துறையினரின் கருத்து.