Thursday, December 11, 2014

விட்டால் காமசூத்ராவை கூட தேசிய நூலாக அறிவிப்பார்கள்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

பகவத்கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்க முடிவெடுத்துள்ள பா.ஜ.க அரசு காமசூத்ராவை கூட தேசிய நூலாக அறிவித்தாலும் அறிவிப்பார்கள், என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். தேனி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்,

செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று தேனி வந்தார் முன்னதாக கூடலூர் லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுக் மணிமண்டபம் சென்றார். அங்குள்ள பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

முல்லை பெரியாறு அணை பகுதிக்கு தமிழக அரசு அதிகாரிகள் தினசரி சென்று வருவதை கேரள வனத்துறை முட்டுக்கட்டை போட்டு தடுக்கிறது. இதனால் பணிகள் பாதிக்கப்படுகின்றன. அணையில் உள்ள தமிழக அதிகாரிகளுக்கு உணவு கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல் தொடர்ந்தால் கேரள-தமிழக மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒற்றுமை சீர்குலையும். இந்நிலை நீடித்தால் தமிழக காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு பொய் வதந்திகளை பரப்பி வருகிறது. தற்போது அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டு நன்றாக உள்ளதால் கேரள அரசின் பொய் அம்பலமாகி உள்ளது. பேபி அணையை பலப்படுத்திய பின்னர் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவேண்டும்.

 இதை உச்சநீதிமன்றமே அறிவிக்கும். உதகமண்டலத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கேரள முதல்வர் உம்மன்சாண்டி நாளை மறுநாள் அங்கு வருகிறார். அப்போது நாங்கள் அவரை சந்தித்து முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடுமாறு வற்புறுத்துவோம். கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மக்கள் ஒதுக்கி வைத்தார்கள்.

ஆனால் இப்போது மோடி அரசு எந்தவித நன்மையும் செய்யாததால் மக்களுக்கு மத்திய அரசு மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு சமஸ்கிருதம், இந்தி மொழியை தமிழகத்தில் புகுத்த முயற்சிக்கிறது. மத அடிப்படையில் மக்களை பிரிக்கும் விதமாக நடந்துகொள்கிறார்கள்.

பகவத்கீதையை தேசிய புனிதநூலாக அறிவிக்க முடிவெடுத்துள்ள அவர்கள் காமசூத்ராவை கூட தேசிய நூலாக அறிவித்தாலும் அறிவிப்பார்கள். கட்சியை பலப்படுத்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன்.

சென்ற இடங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது என்று இளங்கோவன் கூறினார். அவருடன் முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் எம்.பி ஆரூண் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

0 comments:

Post a Comment