Thursday, December 11, 2014

சல்லிக்காசுக்குக்கூட தேறாத படங்கள் எல்லாம் சென்னை சர்வதேச திரைப்படவிழாவில்…!

சென்னையில் நடக்கும் சர்வதேச திரைப்படவிழாக்கள் எல்லாம் பெயருக்குத்தான் ‘சர்வதேச’ திரைப்படவிழா.

உண்மையில் தனி நபர்களும், தனி நபர்கள் நடத்தும் அமைப்புகள் சார்பாகவும் நடத்தப்படும் சாதாரண பட விழாக்களே அவை.

ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதுபோல், தகுதியான அமைப்புகள் இல்லாததினால் தனி நபர்கள் திரைப்படவிழாக்களை நடத்துகின்றனர்.

சில வெளிநாட்டுப்படங்களை வர வைத்து திரையிட்டுவிட்டு ‘சர்வதேச’ என்ற அடைமொழியைப் போட்டுக் கொண்டு பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இண்டோ சினி அப்ரிசேஷன் என்ற அமைப்பு கடந்த 11 ஆண்டுகளாக சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது.

ஒவ்வொரு வருடமும், தமிழக அரசுடன் நெருக்கமாக இருக்கும் திரைப்பட பிரமுகர்களை அருகில் வைத்துக் கொண்டு அரசாங்கத்திடமிருந்து லட்சக்கணக்கில் நிதி உதவியையும் பெற்றுக்கொள்கின்றனர்.

இந்த ஆண்டு, 12-ஆவது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 18-ஆம் தேதி துவங்கி 25-ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டுகளைப் போலவே தமிழக அரசிடமிருந்து 50 லட்சம் மீட்டர் போட திட்டமிட்டுள்ளனர்.

இந்த ‘சர்வதேச’ பட விழாவில் பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, ஈரான், ஆஸ்திரேலியா, போலந்து, பிரேசில், பல்கேரியா, உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த 171 திரைப்படங்கள் திரையிடப்படவிருக்கின்றன.

இந்தியன் பனோரமா பிரிவில் 17 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இவற்றில், ‘மெட்ராஸ்’, ‘என்னதான் பேசுவதோ’, ‘கதை திரைக்கதை வசனம், இயக்கம்’, ‘குற்றம் கடிதல்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘சலீம்’, ‘சிகரம் தொடு’, ‘தெகிடி’, ‘வெண்நிலா வீடு’, ‘பூவரசம் பீப்பி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சதுரங்கவேட்டை’ ஆகிய 12 படங்களை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.

இந்தப் பட்டியலைப் பார்த்த திரைப்படத்துறையினரும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அது மட்டுமல்ல, திரைப்பட விழாவை நடத்துபவர்களின் ரசனை குறித்தே சந்தேகம் எழுந்திருக்கிறது.

உண்மையிலேயே சினிமா அறிவு உள்ளவர்கள்தானா இவர்கள்? என்ற கேள்வியும்தான்.

காரணம், கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் என பல தரப்பினராலும் பாராட்டப்பட்ட கோலிசோடா, சண்டியர், குக்கூ, ராமானுஜன், ஜீவா, சைவம், காடு ஆகிய படங்கள்.

இந்த படங்கள் எதுவுமே திரைப்படவிழாவில் திரையிட தேர்வு செய்யப்படவில்லை.

சற்றே வித்தியாசமான முயற்சியாக கவனத்தை ஈர்த்த ர, உன் சமையலறையில், மஞ்சப்பை போன்ற படங்களும் பட்டியலில் இல்லை.

தகுதியான படங்களை தேர்வு செய்யாமல் சல்லிக்காசுக்குக்கூட தகுதியில்லாத படங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என்று விமர்சனம் எழுந்துள்ளது.

அதோடு, சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் படங்களை திரையிட அதன் நிர்வாகி ஒருவர் பெரும் தொகையை கேட்பதாகவும், பணம் கொடுத்தால் குப்பைப் படத்தைக் கூட பட்டியலில் சேர்த்துவிடுவதாகவும் சொல்லப்படுகிறது.

அப்படி பணம் கொடுத்து சில படங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்.

இதன் காரணமாக, சென்னை திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு 50 லட்சம் வழங்கக் கூடாது என்ற முதல்வருக்கும் கோரிக்கை வைக்கவும், அதையும் மீறி வழங்கப்பட்டால் வழக்குத் தொடரவும் உள்ளனர்.

0 comments:

Post a Comment