Monday, December 1, 2014

பிரஷ்ஷா சாப்பிடலாம்: காய்கறிகளுக்காக மாடித்தோட்டம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழக பரிந்துரைபடி, ஒவ்வொருவரும் நாள்தோறும் 300 கிராம் காய்கறி உட்கொள்வது அவசியம். காய்கறி விலை உயர்வு, காய்கறிகளின் முக்கியத்துவம் அறியாமை, பயிரிட போதுமான நிலம் இல்லாமை ஆகிய காரணங்களால் ஒவ்வொருவரும் தினசரி உட்கொள்ளும் காய்கறிகளின் அளவு குறைந்து வருகிறது. தற்போது காய்கறிகளின் முக்கியத்துவம் குறித்து மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். நகரங்களில் மாடித்தோட்டங்கள் அமைக்கப்பட்டு வருவது, காய்கறி விளைச்சலுக்கு சாத்தியமான விஷயம். மாடித்தோட்டங்கள் கட்டிடத்தின் வெப்பத்தைக் குறைத்து குளிச்சியூட்டுகிறது. மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் செடிகளில் நீராவிப் போக்கு நடைபெற்று வெப்ப நிலையை குறைக்க வழிவகுக்கிறது. இதனால் செடிகளை கொண்டுள்ள கட்டிடங்கள், இவை அல்லாத  கட்டிடங்களை விட குளிர்ச்சியாக உள்ளன.  மின் சக்தியின் தேவையும் வெகுவாக குறைகிறது. மழைக் காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் நீரையும் செடிகள் பயன்படுத்துவதால் வீணாகும் நீரோட்டத்தையும் குறைக்கிறது. பசுமையாக்கல் திட்டத்தை நகர மக்கள் அதிகம் உணர்ந்துள்ளனர்.

ஜப்பானியர் கணக்குப்படி, மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் நகரத்தில் உள்ள 50 சதவீதம் கட்டிடங்களை பசுமையாக்கினால் தட்பவெப்ப நிலை 0.1-0.8 செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள் ளதாக கூறுகின்றனர். மாடிகளில் தொட்டிகளை பயன்படுத்தி காய்கறிகள் பூச்செடிகளை வளர்க்கலாம். இடம் மிக குறைவாக உள்ள நகரவாசிகள் செங்குத்தான தோட்டம் அமைத்தும் பயன்பெறலாம். அதா வது படர்ந்து செல்லக்கூடிய காய்கறி செடிகளையோ அல்லது பூச்செடிகளையோ வளர்க்கலாம். மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் தங்களுக்கு அன்றாட தேவையான காய்கறிகளை விளைவித்து பயன்படுத்துவதோடு நகர மக்களுக்கும் புதிதான காய்கறிகள் கிடைக்க சிறந்த வாய்ப்பாகவும் இருக்கும். மாடித்தோட்டம் அமைப்பதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை தேவை, பருவநிலை, இடம் ஆகும். பெரும்பாலான நகர மக்கள்  சிறிய இடத்தில் அதிகப்படியான காய்கறிகளை சாகுபடி செய்யலாம்.

இம்முறையில் நான்குக்கு நான்கு அடியில்  தோட்டம் அமைக்க வேண்டும். ஒவ்வொரு சதுரத்திலும் ஒவ்வொரு வகையான காய்கறிகளை வளர்க்கலாம். மாடித் தோட்டத்தில் தொட்டிகளில் செடிகளை வளர்க்கும் முறை சிறந்ததாக கருதப்படுகிறது. தொட்டிகள் அமைத்தோ அல்லது சிறிய தொட்டிகளிலோ அல்லது கெட்டியான பாலிதீன் பைகளிலோ செடிகளை வளர்க்கலாம்.தொட்டிகளில் மக்கிய தென்னை நார் கழிவு, மண்புழு உரம், தொழு உரம், உயிர் உரங்கள் கலந்து பயன்படுத்தலாம். இதன்மூலம் தொட்டிகள் அதிக எடை இல்லாததோடு அதிக நீரையும் உறிஞ்சி வேர்களுக்கு கொடுக்கும். அதே நேரம் தேவையற்ற அதிகமுள்ள நீரை எளிதில் வடிய செய்யும்.தொட்டிகளில் அதிகளவு மண் பயன்படுத்தும்போது மாடியின் தளம் மண் ஈரமாக இருக்கும்போது அதைத் தாங்குமா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் மண்ணில்லா ஊடகத்தைப் பயன்படுத்தலாம்.

தொட்டிகளின் அடியில் கீழிலிருந்து அரை அங்குலத்திற்கு மேல் சிறு துவாரம் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்வது அவசியம். பருவநிலைக்கு தகுந்தவாறு பயிர் செடிகளை தேர்ந்தெடுத்து வளர்ப்பது மிக முக்கியம். மேலும் படரும் காய்கறி பூச்செடி வகைகளுக்கு குச்சி கட்டுதல் அவசியம்.திருச்சி சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் அசோகன் கூறியதாவது:  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக புள்ளி விவரங்களின்படி, மாடித்தோட்டம் அமைக்கும் தொழில்நுட்பம் வேண்டுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 2010ம் ஆண்டு 107 பேர் இத்தொழில்நுட்பம் வேண்டி பெயர் பதிவு செய்துள்ளனர். 2012ல் இந்த எண்ணிக்கை 240ஆக உயர்ந்துள்ளது. எனவே மாடித்தோட்டம் அமைத்தல் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இது விஷமற்ற காய்கறிகளை நமக்கு தருவதோடு, பொழுது போக்காகவும், எழிலூட்டவும், நகரத்தில் பசுமையை ஏற்படுத்தவும் சிறந்த வழிகோலாக அமைகிறது.

மாடித் தோட்டங்களில் தக்காளி, வெண்டை, கத்தரி, பாகற்காய், பீன்ஸ், கொத்தமல்லி, புதினா, வெங்காயம், கீரை வகைகள் போன்ற பல காய்கறிகளை வளர்க்கலாம். பூச்செடிகளான ரோஜா, மல்லிகை, செண்டுமல்லி, சாமந்தி, சம்பங்கி மற்றும் அழகு செடிகளையும் வளர்க்கலாம். இவைகள் தவிர வாழை, பப்பாளி போன்ற பழ மரங்கள், துளசி, வல்லாரை, கரிசலாங்கண்ணி போன்ற மூலிகை பயிர்களையும் கூடுதலாக மலர் பயிர்களையும் வளர்க்கலாம். நகரங்களில் தற்போது மக்கள் மாடி கட்டிடங்களில் அதிகப்படியாக வசித்து வருகின்றனர்.இவ்வாறு உள்ள சூழ்நிலையில், பெரிய தோட்டங்கள் அமைக்காவிடினும், சிறிய மாடித்தோட்டங்கள் அமைத்து பயன் பெறலாம். வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும், திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மாடித்தோட்டம் அமைப்பதற்கான பயிற்சியை அளித்து வருகிறது. இவ்வாறு அசோகன் கூறினார்.

0 comments:

Post a Comment

Blog Archive