Wednesday, December 10, 2014

கோஹ்லியின் ஹெல்மெட்டை பதம் பார்த்த பவுன்சர்! பதறிய ஆஸ்திரேலியா வீரர்கள்!!

 ஆஸ்திரேலியா வீரர் ஜான்சன் வீசிய பவுன்சர் பந்து இந்திய வீரர் கோஹ்லியின் ஹெல்மெட்டை பதம் பார்த்ததால் அடிலெய்டு மைதானத்தில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. கோஹ்லிக்கு எந்த பாதிப்பில்லை என்று அறிந்த பின்னரே இயல்பு நிலைக்கு திரும்பினர் ஆஸ்திரேலியா வீரர்கள். பவுன்சர் பந்து தாக்கி ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் உயிரிழந்ததால் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. இப்போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நேற்று முன் தினம் தொடங்கியது.

சதமடித்த மும்மூர்த்திகள்

 முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ரன்களை மலைக்க வைக்கும் அளவுக்கு குவித்தனர். அந்த அணியின் வார்னர், கிளார்க், ஸ்மித் ஆகியோர் சதமடித்தனர்.

2வது நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 517 ரன்களைக் குவித்திருந்தது ஆஸ்திரேலியா. இந்த நிலையில் இன்று 3 வது நாள் ஆட்டம் தொடங்கியது. 517 ரன்களை எடுத்திருந்த ஆஸ்திரேலியா ஆட்டத்தை நிறுத்திக் கொள்வதாக டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா களமிறங்கியது.

இந்திய அணியின் நல்ல தொடக்கம் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜய்யும் தவானும் களமிறங்கினர். இருவரும் ஒருநாள் போட்டிகளைப் போல ரன்களைக் குவிக்க தொடங்கினர். தவான் 24 பந்துகளில் 25 ரன்களை எடுத்து அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து முரளி விஜய்யுடன் புஜாரா இணைந்து கொண்டார்.

முரளி விஜய் 53 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து கேப்டன் கோஹ்லி களமிறங்கி விளையாடிக் கொண்டிருந்தார்.


கோஹ்லியை பதம் பார்த்த பவுன்சர்

அப்போது 31வது ஓவரில் ஆஸ்திரேலியா வீரர் ஜான்சன் வீசிய பவுன்சர் பந்து கோஹ்லியின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது.

இதனால் ஜான்சன் உட்பட ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவரும் பதறிப் போனார்கள். உடனே பவுன்சர் பந்து பட்டு பாதிப்பு ஏற்பட்டுவிட்டதா? என்ற அச்சத்துடன் அவர்கள் கோஹ்லியிடம் போய் நலம் விசாரித்தனர். கோஹ்லி ஹெல்மெட்டை தலையில் இருந்து கழற்றி பாதிப்பு இல்லை என்று கூறியபோதுதான் ஆஸ்திரேலியா வீரர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

பவுன்சர் பந்து பட்டு சக வீரர் ஹியூக்ஸ் சில வாரங்களுக்கு முன்புதான் மறைந்தார் என்பதால் அந்த பதற்றம் ஆஸ்திரேலியா வீரர்களிடம் வெளிப்பட்டது. இதன் பின்னர் மைதானம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

0 comments:

Post a Comment

Blog Archive