Friday, December 19, 2014

பாக். சிறைக்குள்ளேயே "குடும்பம் நடத்தி" தந்தையான தீவிரவாதி 'லக்வி'- திடுக் தகவல்

மும்பை தாக்குதலின் சூத்திரதாரியான ஷகி உர் ரஹ்மான் லக்வி சிறையில் இருந்தாலும் சிறப்பு சலுகைகளுடன் சொகுசாக வாழ்ந்து அங்கே "குடும்பம் நடத்தி" "குழந்தைக்கு தந்தையான"தாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

2008 ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி மும்பையில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 166 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின் மூளையாக இருந்த லஷ்கர் இ தொய்பாவின் ஹபீஸ் சயீத். இச்சதியை செயல்படுத்தியது ஷகி உர் ரஹ்மான் லக்வி.

 இந்தியாவின் நீண்ட வலியுறுத்தலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடைபெற்ற 'மும்பை தாக்குதல் வழக்கில்' லக்வி சேர்க்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறான்.

அப்போது லக்வி, ஒரு குழந்தைக்கு தந்தை என்ற தகவல் ஏதும் இல்லை. பின்னர் 2010 ஆம் ஆண்டு சிறையில் இருந்தபடியே அபு ஜிண்டால் உள்ளிட்ட சக தீவிரவாதிகளைத் தொடர்பு கொண்டு தனக்கு குழந்தை பிறந்த செய்தியை பகிர்ந்து கொண்டிருக்கிறான் அவன். 2 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய அபு ஜிண்டாலை இந்தியா கைது செய்தது.

மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு இந்தியர்களை கொல்ல உத்தரவுகள் பிறப்பித்ததும் அபு ஜிண்டால்தான்.. அவனுக்கு இந்தி கற்றுக் கொடுத்ததும் ஜிண்டால்தான்.. அபு ஜிண்டாலிடம் தேசிய புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்திய போது லக்வியுடனான தொடர்புகளை விவரித்துள்ளான்.. "2010ஆம் ஆண்டு சிறையில் இருந்து அவன் எனக்கு போனில் பேசினான்.

அப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.. தான் ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்டதாகவும் கூறினான். தனது இளம் மனைவி சிறையில் தன்னுடன் தங்கி இருக்க சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்றான். நானும் அவனுக்கு வாழ்த்து தெரிவித்தேன்" என்று கூறியிருந்தான் ஜிண்டால். இதை இந்திய அரசும் உறுதிப்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் அரசிடம் கேள்வி எழுப்பியது.

ஆனால் இதுநாள் வரை பாகிஸ்தானிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. இத்தனைக்கும் சிறையில் ஆர்டரலி வசதி, தொலைக்காட்சி மற்றும் தொலைத் தொடர்பு வசதிகளுடன் லக்வி சுதந்திரமாக இருப்பதற்கான ஆதாரங்களையும் இந்தியா கொடுத்தும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் லக்விதான் முக்கியம்.

 லஷ்கர் தொ தொய்பா இயக்கத்தின் மூத்த தளபதி என்பதால் சிறப்பு சலுகைகளை அவனுக்கு அந்நாட்டு அரசு அளித்தது. இப்படி லக்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாகிஸ்தான் தற்போது, மும்பை தாக்குதல் வழக்கில் அவனுக்கு எதிராக போதுமான சாட்சியம் இல்லை என்று கூறி ஜாமீன் வழங்கியிருப்பது ஆச்சரியப்படுத்தவதற்கில்லைதான்..

 நமது நாட்டின் உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்களின்படி லக்வி முழுமையாக சிறைவாசத்தை அனுபவித்தது இல்லையாம்; வெளியில் சுதந்திரமாக சென்று வர அனுமதிக்கப்பட்டிருக்கிறது.. அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டிருந்ததாம்.

மும்பை தாக்குதல் வழக்கில் அவனுக்கான தொடர்புகள் குறித்து இந்தியா ஏராளமான ஆதாரங்கள் வழங்கியிருந்தும் பாகிஸ்தான் அவனுக்கு இத்தனை சுதந்திரம் கொடுத்திருக்கிறது. மும்பை தாக்குதல் வழக்கில் லக்விக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்கா கூட கூறியது..ஆனாலும் பாகிஸ்தானிடம் இருந்து எந்த பதிலும்தான் இல்லை.. அவனுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது.. அவன் மீது யாரும் தாக்குதல் நடத்தி விடக் கூடாது என்று பாதுகாக்கவே சிறையில் அடைப்பது போல் பாகிஸ்தான் நாடகமாடியிருக்கிறது என்பதுதான் உளவுத்துறையினரின் கருத்து.

0 comments:

Post a Comment