Friday, December 19, 2014

கேபியின் உடல் நிலையும்..... மீடியாக்களின் ‘கொலை’ப் பசியும்!

கடந்த சில நாட்களாக சினிமா வட்டாரத்திலும் மீடியாக்கள் வட்டாரத்திலும் பெரிய பரபரப்பு ஏற்படுத்திய செய்தி தமிழ் சினிமாவின் பிதாமகன் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் உடல் நிலை பற்றியதுதான்.

இது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், அதைவிட பெரிய அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது இந்த விஷயத்தில் சில மீடியாக்களின் அநாரீகமான அணுகுமுறை. இரண்டு நாட்களுக்கு முன் கே.பி அவர்கள் லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆழ்வர்பேட்டை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தகவல் சில விஷமிகள் மூலம் வாட்ஸ் அப்பில் கே.பி இறந்து விட்டதாகவே ( மன்னிக்கவும்) பரபரப்பப்பட்டது. உடனே ஒட்டு மொத்த மீடியாக்களும் தங்கள் ஊழியர்களை மருத்துவமனையில் குவித்தன.

தொலைக்காட்சி மீடியாக்களும் கேமாராக்களுடன் மருத்துவமனை முன்பு அணிவகுத்தன. திரையுலக பிரபலங்கள் ஓவ்வொருவராக வர ஆரம்பித்தனர். பத்திரிகையாளர் ஒவ்வொருவரிடமும் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தனர்.

அனைவரும் கே.பி. சார் நலமாக உள்ளார் என்ற தகவலை சொன்னார்கள்.ஆனால் மீடியாக்காரர்கள் யாரும் அவர்கள் சொல்லுவதை நம்பத் தயாராக இல்லை. அதனால் அவர்களிடம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தனர்.

இதல் சிலர் கோபமாகி அந்த இடத்தை விட்டு கிளம்பிச் சென்றனர். ரஜினி வந்த போதும் ‘சார் நல்லா இருக்காங்க சீக்கிரம் குணம்டைஞ்சு வருவாங்க' என்று சொன்ன போதும் மீடியாக்களின் முகத்தில்! என்ன இது.. இன்னும் நாம் எதிர்பார்த்த நியூஸ் வரவில்லையே என்பது போல் பெரிய ஏமாற்றம் தெரிந்தது.

சிறிது நேரத்தில் குஷ்பூ அங்கு வந்தார். பதட்டத்துடன் உள்ளே சென்றவர் கே.பியை பார்த்த்போது, ‘கமாண்டிங் பவரோடு எத்தனை படைப்புகளை கொடுத்த சாதனை மனிதர் இப்படி இருக்கிறாரே' என்று ஆதங்கப்பட்டு வரும்போது அழுத கண்களை துடைத்தபடியே வந்தார்.

அவ்வளவுதான் மொத்த பத்திரிகையாளர்களும், "ஆமா... சார் போட்டுறலாம் சார்.. குஷ்பூ கதறி அழறாங்க சார்" , என்றும் இன்னும் சிலர் "மைலாப்பூர் வீட்லேயே வெச்சிருவாங்கா சார். நாளைக்குதான் மற்ற விஷயம். " என்றும், "பெசண்ட் நகர் இல்லன்னா கிருஷ்ணாம்பேட்டை.. இன்னும் தெரியலை சார்" என்றும் நம் காதுபடவே சிலர் செல்போனில் சொல்லிக்கொண்டிருந்ததையும் கேட்க முடிந்தது.

இதையெல்லாம் பார்க்கும்போது கவலையாகவும், வெட்கமாகவும் கூட இருந்தது. ஒரு செய்தியை முதலில் வெளியிடுவது என்பது மீடியாக்களின் தொழில் சம்மந்தபட்ட விஷயம் என்றாலும், எந்த மாதிரியான செய்தியை முதலில் சொல்ல வேண்டுமென்கிற அடிப்படை தர்மம் வேண்டாமா.

எண்பத்தி நான்கு வயதில் ஒரு மனிதர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டால் அது மரணத்திற்காக மட்டுதான் இருக்க முடியுமா? ஒரு வயதானவருக்கு இயல்பாக என்ன பிரச்சனைகள் வருமோ அப்படிப்பட்ட பிரச்சனைகளுக்காக இருக்கக்கூடாதா? இதில் கொடுமை என்னவென்றால் குஷ்பூ வெளியில் வந்து "சார் நல்லா இருக்காக்ங்க" என்றதும் சிலர் "என்ன மேடம் சொல்றீங்க நல்லா இருக்காரா?" என்று முகத்தில் அதிர்ச்சியை காட்டி அவசர அவசரமாக அவரது அலுவலகத்திற்கு போன் பண்ணி கே.பியை பற்றி தான் சொன்ன தகவலைத் திருத்துகிறார்.

மரணத்தைக்கூட முதலில் நாம்தான் சொல்ல வேண்டும் என்கிற இந்த அநாகரீக அரிப்பு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதற்கு சில சம்பவங்கள். காமெடி மன்னன் கவுண்டமணி சில வருடங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தகவல் வெளியானதும் இந்தியா முழுவதும் வெளிவரும் ஒரு முன்னனி ஆங்கில நாளிதழ் நடத்தும் இணைய தளம், பிரபல வார இதழ் நடத்தும் இணையதளத்திலும் கொட்டை எழுத்தில் கவுண்டமணி மரணம் என்று செய்தியைப் போடு விட்டு மார்தட்டிக்கொண்டது. ஆனால் சிகிச்சை முடிந்து கவுண்டமணி நலமாக வீட்டுக்கு திரும்பி விட்டார்.

அன்று தற்செயலாக இதைக் கேள்விபட்டு கவுண்டமணி தன்னுடைய நக்கல் நடைலில் அந்த நபர்களை காய்ச்சி எடுத்திருக்கிறார். இதே போல் இன்னொரு பத்திரிகையில் தயாரிப்பாளர் நடிகர் பாலாஜி அவர்கள் இறந்து விட்டதாக செய்தி வந்து விட்டது. மறுநாள் அந்த அலுவலகத்திற்கு ஒரு போன் வந்திருக்கிறது.

போனை எடுத்த ஊழியார் "ஹலோ யார் பேசறது" என்க, மறுமுனையில் "நான் தான் செத்துப்போன பாலாஜி பேசுறேன்" என்று சொல்லவும் அந்த ஊழியர் ஆடிப்போய் விட்டார். சமீபத்தில் எம்.எஸ்.பாஸ்கர் மறைந்து விட்டதாக வாட்ஸ் அப்பில் தகவல் வந்தது.

அன்று மாலை நடந்த சினிமா விழாவில் எம்.எஸ்.பாஸ்கரே கலந்து கொண்டு "நான் இறந்த பாஸ்கர் பேசுகிறேன்" என்று வேதனையுடன் தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். இப்படி மீடியாவின் 'கொலை‘ப்பசிக்கு பலியானவர்களில் கலைஞர், மனோரமா, என்று ஒரு பட்டியலே இருக்கிறது. இனிமேலும் இந்த பட்டியல் நீளக் கூடாது என்பதுதான் நமது கவலை.

அதனால் பத்திரிகைகள் இதுபோன்ற தகவல்களை தாமதமாகக் கொடுத்தாலும் தவறில்லை என்ற மன நிலைக்கு வரவேண்டும். கே.பி பற்றி எதிர்மறைத் தகவலை முதலில் சொல்வது மட்டும் மீடியாக்களின் கடமை அல்ல. அவர் தமிழ் சினிமாவிற்கு ஆற்றிய பங்களிப்பும், யாரும் சொல்லத் துணியாத கருத்துக்களை தைரியமாக திரையில் சொன்ன அவரது துணிவும், அவரது ஆளுமையும், புரட்டிப்போட்ட புரட்சிகரமான கருத்துகளையும் இந்த தலைமுறையினருக்கு தெரியும் வகையில் சொல்ல வேண்டியதும் மீடியாக்களின் கடமைதானே.

அவர் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நாளிலிருந்து இன்று வரைக்கும் ஒவ்வொரு நாளும் அதை எழுத ஆரம்பித்திருந்தாலே அதைப் படித்த அல்லது படித்தவர்கள் வாய்வழி பரவும் அந்த பாஸிடிவ் வைப்ரேஷனிலேயே பாலசந்தர் எழுந்து நடந்து வந்திருப்பார்.

ஆனால் மீடியாக்களுக்கு தேவை கே.பாலசந்தரின் உயிரற்ற உடல் தானே தவிர தமிழ் சினிமாவிற்கு உயிர் கொடுத்த துணிச்சலான அவரது கருத்துகள் அல்ல என்றல்லவா ஆகிவிட்டது!

0 comments:

Post a Comment