Sunday, December 7, 2014

அம்மாவைச் சந்தித்தார் மு.க.அழகிரி...

 முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது தாயார் தயாளு அம்மாளை நேற்று இரவு கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினார்.

அதன் பின்னர் தனது தந்தை திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு வருவதற்கு முன்பு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் மு.க.அழகிரி.

அதைத் தொடர்ந்து அவர் தனித்து செயல்பட்டு வருகிறார். இருப்பினும் தற்போது மீண்டும் அவரை கட்சியில் சேர்க்க அழகிரி தரப்பைச் சேர்ந்த கருணாநிதியின் குடும்பத்தார் முயற்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் திமுக பொருளாளரும், அழகிரியின் தம்பியுமான ஸ்டாலின் கூறுகையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், விலகியவர்கள் மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்தால் மீண்டும் சேர்க்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அழகிரி, அந்த அதிகாரம் தலைவருக்கும், பொதுச் செயலாளருக்கும் மட்டும்தான் உள்ளது என்று கூறியிருந்தார். இந்த பின்னணியில் நேற்று இரவு கோபாலபுரம் வந்தார் அழகிரி. அங்கு தனது தாயார் தயாளு அம்மாளைச் சந்தித்துப் பேசினார்.

ஒரு மணி நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் அழகிரி அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அழகிரி தயாளு அம்மாளுடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், திமுக தலைவர் கருணாநிதி சிஐடி காலனியில் உள்ள ராசாத்தி அம்மாள் வீட்டில் இருந்ததாக தெரிகிறது. அழகிரி புறப்பட்டுப் போனவுடன் அவர் கோபாலபுரம் இல்லம் திரும்பினார்.


0 comments:

Post a Comment