Sunday, December 7, 2014

'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினியைத் தாக்கும் பாரதிராஜா

 நடிகனிடம் ஆஸ்கார் விருது எப்போது வாங்குவீர்கள் என்று ஊடகங்கள் கேட்பதை விட்டுவிட்டு, அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று ஏன் கேட்கிறீர்கள்... அரசியலில் ஈடுபட நடிகனுக்கு என்ன தகுதி இருக்கிறது.. ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிட்டுகிட்டே இருப்பீங்க.. என்பது போல தடாலடியாக பேட்டியளித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

ஒரு வார இதழுக்கு தந்துள்ள பேட்டியின்போது,

விஜயகாந்த், ரஜினி, விஜய் என நடிகர்கள் அரசியலுக்கு வர்றதுக்கு சினிமாதான் பாதையா? என்ற கேள்விக்கு பாரதிராஜா பதிலளித்துள்ளதாவது:

இதுக்கு அடிப்படையான காரணம் யார் சொல்லுங்க? ஊடகம்தான். நடிகர்களைத் தூண்டிவிட்டு, 'அரசியலுக்கு வருவீங்களா?'னு முதல் கேள்வி கேட்குது. சினிமாவில் சிறந்த படைப்புகளைக் கொடுத்திருக்கீங்க. மேடையில உணர்ச்சிகரமாப் பேசுறீங்க. நீங்க ஏன் அரசியலுக்கு வரக் கூடாது'னு என்கிட்டயே கேக்கிறாங்க.

ஒய் தே ஆர் டூயிங் லைக் திஸ்? ஒரு நடிகன்கிட்ட, 'எப்போ ஆஸ்கர் விருது ஜெயிப்பீங்க?'னு கேளுங்க. அதை விட்டுட்டு அரசியல் பத்தி எல்லாம் ஏன் கருத்து கேக்கிறீங்க? சரி... அப்படியே யாராவது கேட்டாலும், அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்.

அரசியலில் ஈடுபட எனக்கு என்ன தகுதி இருக்கு? சமூகத்தில் என் பொறுப்பு, ஒரு கதை சொல்லி! அதுக்கு மேல எனக்கு எந்த முக்கியத்துவமும் வேண்டாம்.

ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல்... ஒரு நடிகனுக்கு அரசியலில் ஈடுபட என்ன தகுதி இருக்கு? இந்த நாட்ல எத்தனை ஜீவநதிகள் ஓடுதுனு சொல்லச் சொல்லுங்க. 'எத்தனை நதிகள் வற்றி வறண்டு காணாமல்போச்சுனு தெரியுமா?'னு கேளுங்க. 'இந்தியாவுல எத்தனை டேம் இருக்கு?'னு கேட்டுப் பாருங்க. வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் கலாசாரரீதியா என்ன வித்தியாசம்னு தெரியுமா?

சும்மா நாலு ரசிகர் மன்றங்கள் வெச்சு 50 பேருக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்துட்டா, அரசியலுக்கு வந்துரலாமா? வாட் இஸ் திஸ்? எனக்கு எந்தப் பயமும் இல்லை. நான் சொல்றதை அப்படியே போடுங்க. கர்நாடகா, கேரளாவில் இப்படிப் பண்ண முடியுமா? ஏன் தமிழ்நாட்ல மட்டும் இப்படி எல்லாம் நடக்குது?''.

சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரவே கூடாதா?

"சினிமாவில் இருந்து விலகி 10 வருஷம் மக்கள் மத்தியில் வேலை பார்த்து, சோஷியல் சர்வீஸ் எல்லாம் செய்து, மேடையில் பேசி அப்புறமாத்தான் அரசியலுக்கு வரணும். கோ அண்ட் வொர்க் ஃபர்ஸ்ட்!

நேத்து நடிக்க வந்துட்டு நாளைக்கு சி.எம் ஆக ஆசைப்படக் கூடாது. 20 வருஷமாவா ஒருத்தரை (ரஜினி) அரசியலுக்குக் கூப்பிட்டுட்டே இருப்பீங்க. வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்? அட்லீஸ்ட் முனிசிபாலிட்டி, பஞ்சாயத்துத் தேர்தல் நின்னு ஜெயிச்சுட்டு, அப்புறம் அரசியல் கட்சியில சேர்ந்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யட்டும்!".


இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment